Wednesday, April 25, 2012


                 பெற்றோர்  வணக்கம்

அன்னையே!  தந்தையே!  நமஸ்காரம்

   அனுதினம்  அன்பாய்  வளர்த்திடுவீர்

முன்னறி  தெய்வம் நீரன்றோ

   முன்நின் றெம்மை  காத்திடுவீர்.



சொன்ன சொற்கள் கேட்டிடுவோம்

   துதிசெய்து  உம்மைப் போற்றிடுவோம்

கன்னஞ் சிவக்கத்  தினமும்நீர்

   கணக்கில்  முத்தம் ஈய்ந்திடுவீர்.



இனிய பண்டம் அளித்திடுவீர்

   இன்பம்  பொங்க  வளர்த்திடுவீர்

மனையும் விளங்க நாங்களுமே

   மங்கா  விளக்கென ஒளிர்ந்திடுவோம்.



சுற்றி  நாங்கள் ஆடிடுவோம்

   சூழ்ந்து உம்மைப் பாடிடுவோம்

கற்ற  பாடம் ஓதிடவே

   கனிந்து நீரும் கேட்டிடுவீர்.



                கடவுள்  வணக்கம்

எங்கும் நிறைந்த பரம்பொருளே!

  இதயம் விளக்கும் பேரொளியே!

தங்கக்  குழந்தைகள் நாமன்றோ

  சகல உயிரும் உமதன்றோ.



நித்தம் எம்மைக் காத்திடுவீர்

  நெருங்கும் துன்பம் போக்கிடுவீர்

சித்தம் ஒன்றிச் சேர்ந்திங்கு

  சிறியோம் உம்மை போற்றுவமே.



தாயும் தந்தையும் நீரன்றோ!

  சந்திர சூரியர் நீரன்றோ!

காயும் கனியும் நீரன்றோ!

  கரும்பும் சுவையும் நீரன்றோ!

Thursday, April 19, 2012

29/9/1966 ம் ஆண்டளவில் கவிஞர் யாழ்ப்பாணன்
திரு.வே.சிவக்கொழுந்து அவர்களின் கைபட எழுதிய ஓர் அருமையான கணபதி பாடல்

Friday, April 6, 2012

யாழ்ப்பாணனின் கவித்துளிகளில் ஒன்று

 வீரத்தமிழா எழுந்திடுவாய்!!!
வீரத்தமிழா எழுந்திடுவாய் 
   வெற்றிச் சங்கம் முழக்கிடுவாய்
சோர்வு போக்கித் துள்ளியும்நீ
   சுவர்க்க வாழ்வு கொணர்ந்திடுவாய்.
பாரதி கண்ட கனவெல்லாம்
  பாரினில் இன்று பலித்திட
வீரா உந்தன் உழைப்பால்
   வேண்டிய சாத்திரஞ் செய்திடுவாய்.
கமழும் நல்ல காவியங்கள்
  காட்சி நிறை பேர் ஓவியங்கள்
குழியிற் புதையா  வகைகண்டு
   குவலயம்  போற்ற வந்திடுவாய்.
பெண்ணைப்  போற்றி  வளர்த்திடுவாய்
   பெரிய  கல்வி  அளித்திடுவாய்
மண்ணை  செழிக்க  வைத்திடுவாய்
   மகிழ்வை  யெங்கும்  விளைத்திடுவாய்.
நாட்டது  விடுதலை  நாட்டிடுவாய்
   நன்மொழி  தன்னை  போற்றிடுவாய்
பாட்டோடு  தாளம் கூடிட
   பற்பல ஆட்டம் பயின்றிடுவாய்.
தமிழ்த்திரு நாடுன்  தாயேகாண்
   தாழ்வோடு தினமும் பணிவாய்!!!
கமழ்தரு  மலர்கள்  பாதம் சூடி
    கணமும்  அவளைத் துதித்திடுவாய்.
உனது  பணிகள் பலவுண்டு
   ஊக்கம்  பொங்க உழைத்திடுவாய்
தனது  நலத்தை  பாராமல்
   பரணி  போற்ற  வாழ்ந்திடுவாய்.
வீரம் பொங்க விளங்கிடுவாய்
   வெற்றி எங்கும் விளைத்திடுவாய்
தூரம் குறுகக் கண்டிடுவாய்
   துரிதமுறும் உன் உழைப்பால்.
இன்றே தொடங்கி  உழைப்பாயடா
   ஏறு  போல்நீ   நடப்பாயடா
நன்றே கூடி நாமெல்லாம்
   நாளும் உன்னை துதிப்பமடா!!
வீரத் தமிழா  எழுந்திடுவாய்
   வெற்றிச் சங்கம் முழங்கிடுவாய்
சோர்வு போக்கித் துள்ளியும்
   சுவர்க்க வாழ்வு கொணர்ந்திடுவாய்


Sunday, April 1, 2012

 மீண்டும் நீண்டகால இடைவெளியின் பின்னர்

உங்கள் கரங்களில் தவழ வருகிறது

கவிதையுலகின் மற்றோர் ஜோதி

"ஜீவஇரக்கம்"

கவிஞர் யாழ்ப்பாணன்

திரு.வே.சிவக்கொழுந்து

அவர்களின்


" மாலைக்கு மாலை"


புதிய வடிவமைப்பில்

வெளிவர இருக்கின்றது

ஆவலுடன் எதிர்பாருங்க்கள்!!!




                                           


சிவக்கொழுந்து (கவிஞர் யாழ்ப்பாணன்)



ஜீவ இரக்கம் கவிஞர் யாழ்ப்பாணன் பாடல்


>நண்டின் காலை ஒடிக்காதே
நாயைக் கல்லால் அடிக்காதே
வண்டைப் பிடித்து வருத்தாதே
... வாயில் பிராணியை வதைக்காதே

கோழிக் குஞ்சைத் திருகாதே
குருவிக் கூண்டைச் சருவாதே
ஆழி சூழுலம் உலகேத்தும்
அன்பு காட்டி வதிவாயே.

ஊனைத் தின்று வாழாதே
உயிரைக் கொன்று தாழாதே
மானைக் கொன்றால் மான் கன்று
வருந்தல் நீயும் அறிவாயோ?

கிளியைக் கூண்டில் அடைக்காதே
கேடுனை வந்து சூழ்ந்திடுமே
ஒளியே யில்லாச் சிறைதனிலே
உன்னை வைத்தாற் சகிப்பாயோ?

எல்லா உயிரும் இறைமகவே
இன்பம் நாடி உழைப்பனவே
பொல்லாப் பொன்றும் செய்யாதே
புனித வாழ்வு காண்பாயே.

இந்த இனிய பாடல் பாடலைப் பாடியவர் கவிஞர் யாழ்ப்பாணன். எனது பிறந்த ஊரான வியாபாரிமூலைச் சார்ந்தவர். இந்த கவிதை அவரது கவிதை நூலான ‘மாலைக்கு மாலை’ யிலிருந்து எடுக்கப்ட்டது. 1948 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.


இதற்கு முன்னுரை வழங்கியது இலங்கைப் பல்கலைப் கழகப் பேராசிரியரான க.கணவதிப்பிள்ளை ஆகும்.

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் வாழ்த்துரை வழங்கியிருந்தார் என்பது குறிப்படத் தக்கது.
திரு.வே.சிவக்கொழுந்து (கவிஞர் யாழ்ப்பாணன்)
பருத்தித்துறை வியாபாரிமூலைச் சார்ந்த அறிஞர்களி் ஒருவர் திரு.வே.சிவக்கொழுந்து. கவிஞர் யாழ்ப்பாணன் என்ற பெயரில் இவரது புகழ் தமிழ் கூறும் உலகெங்கும் பரவியிருந்தது.

திரு.வே.சிவக்கொழுந்து (யாழ்ப்பாணன்)
மாலைக்கு மாலை,
முல்லைக் காடு,
கவிதைக் கன்னி
பாலர் பாடல்கள்
ஆகியன இவரது கவிதை நூல்களாகும்.
ஜீவ யாத்திரை இவரது நாவலாகும்
இவை தவிர பூமிசாத்திரம், மனக்கணிதம் போன்ற பல பாட நூல்களையும் இயற்றி அன்றைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும் தொண்டாற்றினார்.
அக்காலத்தில் வடமாகாண மாணவர்கள் கணிதத்தில் மிகவும் முன்னணியில் திகழ்ந்ததற்கு இவரது மனக் கணித நூல்கள் காரணமாக இருந்தன என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இவர் ஆரம்பித்து நடாத்தி வந்த ‘வடலங்கா புத்கசாலை’ அன்று எமது வாசிப்புத் தீனிக்கு அன்றைய காலகட்டத்தில் தீனி போட்டதை மறக்க முடியாது.
அதே போல அவரது கலாபவனம் அச்சகமும் அன்றைய காலகட்டத்தில் ஆற்றிய அச்சக சேவை மிகவும் பிரபலமானது.
மாலைக்கு மாலை என்ற இந்த நூலானது நூலகம் இலங்கை நூல்களை இணையத்தில் தரும் தளமான நூலகத்தில் கிடைக்கிறது.


http://www.noolaham.org/